அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் இணைவது குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கட்சியை வலுப்படுத்தவும், வரும் தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்யவும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில், “யாரையும் நாங்கள் பகையாக நினைக்கவில்லை; கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம்” என்று செல்லூர் ராஜு சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி மாறப்போவதாக வரும் தகவல் வதந்தி எனக் கூறிய செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். OPS, TTV இணைப்பை பற்றி EPS தான் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இது ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பை அக்கட்சித் தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான பச்சைக்கொடி காட்டப்படவில்லை. கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து, கட்சியின் நலன் கருதி ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வந்தாலும், தலைமை மட்டத்தில் நிலவும் பிடிவாதமான சூழல் இன்னும் மாறவில்லை என்றே தெரிகிறது. செல்லூர் ராஜுவின் இந்த ‘அப்டேட்’ ஒரு சமரச முயற்சியின் தொடக்கமா அல்லது பொதுவான கருத்தா என்பது வரும் நாட்களில் கட்சித் தலைமை எடுக்கப்போகும் முடிவிலேயே அடங்கியுள்ளது.
