அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணியாகவும் அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது. தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உட்கட்சிப் பூசலால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அதிமுக அலுவலகங்களைக் கைப்பற்றுவதில் இரு தரப்பினரிடையே கடுமையான மோதல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் கட்சி அலுவலகங்களுக்குள் செல்ல முயன்றபோது, வேலுமணி தரப்பு ஆதரவாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆங்காங்கே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அந்தந்த மாவட்ட அதிமுக அலுவலகங்கள் பூட்டப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியைச் சேர்ந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே வேளையில், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்ததால் கட்சியில் பெரும் பிளவு அதிகாரப்பூர்வமாக வெட்டவெளிச்சமானது.
இதனைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப் பறித்து அதிரடி உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்குப் பதிலாகப் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்ததே தற்போது மாவட்ட அளவில் மோதல்கள் தீவிரமடைய முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை, அதிமுகவின் செல்வாக்கு மிக்க மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் இருவேறு அணிகளாகப் பிரிந்து நேருக்கு நேர் மோதி வருகின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்; அதே நேரத்தில் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ, எஸ்.பி.வேலுமணி தரப்பின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். மாவட்டத்தின் இரு பெரும் தலைவர்கள் இரு துருவங்களாகப் பிரிந்து நிற்பதால் திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொண்டர்களிடையே பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே எவ்வித அசாம்பாவிதமும், மோதல் போக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான நெப்போலியன், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீபிடம் ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவின் அடிப்படையில், இரு தரப்பினரும் கட்சி அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு அலுவலகம் பூட்டப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1971-ல் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இக்கட்சி தற்போது சந்தித்து வரும் இந்த உச்சக்கட்ட பிளவு தொண்டர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…