2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, தற்போது முதல் அக்னிப் பரீட்சையாக இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்த 100 நாட்களிலேயே குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் தொடர் ராஜினாமாவால் உருவான அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், காலியான 7 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தனித்தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் திடீரென தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ஆளுங்கட்சியான தவெகவும், முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் இன்னும் தங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அமைதி காத்து வரும் சூழலில், அதிமுக முந்திக் கொண்டு தனது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனு விநியோகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி வரை தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்ற இந்த அறிவிப்பு, தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்பி, எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவளித்து பின் பதவிகளை ராஜினாமா செய்த சம்பவங்களால் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்திருந்த நிலையில், இத்தகைய எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை கட்சி இன்னும் சுறுசுறுப்புடனும் உயிர்ப்போடும் இருக்கிறது என்பதை நிரூபிப்பதாக ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இருப்பினும், விருப்ப மனு விநியோகத்தில் காட்டிய இதே வேகத்தையும் விவேகத்தையும் தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் களத்தில் காட்டினால் மட்டுமே இந்த இடைத்தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நிலையில், அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 100 நாள் தவெக ஆட்சியின் மீதான மக்கள் தீர்ப்பாகவும், எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பிற்கான சோதனையாகவும் பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தல் களத்தில், அதிமுகவின் இந்த ஆரம்பகட்ட வேகம் எந்த அளவுக்கு வெற்றியாக மாறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
