தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் தனது பதிலுரையின் போது, டாஸ்மாக்கில் கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்) வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிட்டதால் ஆளுங்கட்சியான திமுகவினர் கடும் அதிருப்தியடைந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். மேலும், தவெக அமைச்சர்கள் மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதங்கள் மற்றும் ஒருமையில் பேசிய வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரிய விவகாரங்களைத் தொடர்ந்து, திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
திமுகவினரின் வெளிநடப்பைத் தொடர்ந்து தனது பேச்சைத் தொடர்ந்த முதல்வர் விஜய், “முதல்வருக்குப் பேசத் தெரியவில்லை, பதிலளிக்கத் தெரியவில்லை என்று விமர்சிப்பவர்கள், நான் பதிலளிக்கும் போது அதைக் கேட்காமல் ஓடிவிடுகிறார்கள்” என்று சாடினார். மக்கள் தவெகவிற்கு வாக்களித்தது தவறு என்று திமுகவினர் தொடர்ந்து மக்களைச் சாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பங்கள் மாறினாலும் திமுகவினர் கடந்த 50 ஆண்டுகளாக ஒரே பழைய டெக்னிக்கை வைத்தே விமர்சனம் செய்து வருவதாக நையாண்டி செய்தார். அத்துடன், மக்களின் பணத்தை நாங்கள் தொடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று அவர் மேடையில் அதிரடியாக எச்சரித்தார்.
முதல்வர் விஜய்யின் இந்த அதிரடியான பதிலுரைக்குப் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் முதன்முறையாகப் பேசிய இந்த உரை சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அவர் அவையை விட்டு வெளியே வரும் வழியில் அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி காத்திருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்க்கு கை கொடுத்து, உங்களது பேச்சு மிகவும் நன்றாக இருந்தது என அவர் பாராட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இருப்பினும், இந்த வாழ்த்துக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான அரசியல் முரணும் ஒளிந்துள்ளது. ஏனெனில், முதல்வர் விஜய் தனது பதிலுரையின் போது, 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை ஆண்ட புண்ணியவான்கள் நிர்வாகத்தில் ஓட்டை போட்டுவிட்டனர், அதைத் தற்போது சரி செய்ய வேண்டியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த அதிமுக ஆட்சிக்காலத்தைக் கடுமையாக விமர்சித்துப்பேசிருந்தார். தங்களது ஆட்சிக்காலத்தை விமர்சித்துப் பேசிய போதிலும், சற்றும் முகம் சுளிக்காமல் அதிமுகவின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
