“எதுக்கு இங்க வந்தோம்னே தெரியல”…. அதிமுக சீனியர்களுக்கு விஜய் கொடுத்த ‘மெகா ஷாக்’…. பனையூரில் நடந்தது என்ன….?

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்குக் கட்சியில் உரியப் பதவிகளோ, எதிர்காலப் பொறுப்புகள் குறித்த எந்தவித உத்தரவாதமோ இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாக்களின் போது, அதிமுகவைச் சேர்ந்த 8 முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி-க்கள் மற்றும் 6 சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் தங்களை விஜய்யின் கட்சியில் இணைத்துக் கொண்டனர். மூத்த தலைவர்களின் இந்த அதிரடி வருகையால் தவெகவே ‘ஹவுஸ்ஃபுல்’ நிலையை எட்டியதுடன், ஆரம்ப கால நிர்வாகிகள் தங்களது அதிகாரம் குறையுமோ என அஞ்சத் தொடங்கும் அளவுக்குச் சூழல் இருந்தது.

இருப்பினும், தவெகவில் இணைந்த பல அதிமுக சீனியர் நிர்வாகிகள் தற்பொழுது கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. கட்சித் தலைமையை அணுகுவதே அவர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளதோடு, முக்கியக் முடிவுகள் எடுப்பதிலும் அவர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் அளவில் தவெக நிர்வாகிகளால் நடத்தப்படும் மாவட்ட ஆலோசனை கூட்டங்களுக்குக்கூட இந்த மூத்த தலைவர்களை அழைப்பதில்லை என்பதால், தங்களின் ஆதரவாளர்களிடம் அவர்கள் தங்களின் ஆதங்கத்தைப் புலம்பி வருகின்றனர்.

   

இதனிடையே, பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்த விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா போன்ற முன்னாள் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்ற உறுதியான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தரப்பினர் எந்தவிதக் தயக்கமும் இன்றி தவெகவினருடன் இணக்கமாகப் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

   

ஆனால், அதே நேரத்தில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், வளர்மதி, ஆனந்தன் போன்ற மூத்த தலைவர்களுக்கு இதுவரை எந்தப் பதவியோ அல்லது குறைந்தபட்ச உத்தரவாதமோ வழங்கப்படவில்லை. தவெகவில் இணைய உறுதியளிக்கப்பட்ட வாய்ப்புகள் அனைத்தும் தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகக் கூறும் இவர்கள், உள்ளூர் தவெக நிர்வாகிகளின் முட்டுக்கட்டையே தங்களுக்கு மரியாதை கிடைக்காமல் போவதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.