தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்தும், முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான ஆட்சி குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். தற்போதைய அரசு போதிய பெரும்பான்மை இல்லாத அரசு என்று குறிப்பிட்ட அவர், பிற கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கேட்டு பிச்சை எடுத்து ஆட்சி நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் விஜய் ஆதரவு கேட்டதாகவும் அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் மீது கடும் நிதி முறைகேடு புகார்களைச் சுமத்தினார். லண்டனில் ரூ. 15,000 கோடி முதலீடுகளை ஈர்த்ததாகக் கூறப்படும் ஒப்பந்தங்களை, தமிழக தலைமைச் செயலகத்திலேயே கையெழுத்திட்டிருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், இதற்காக ரூ. 50 கோடி வரை அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உலகிலேயே மிகக் காஸ்ட்லியான ஹோட்டல்களில் தங்கி, அரசுச் செலவில் இன்பச் சுற்றுலா போல இந்தச் சுற்றுப்பயணம் நடத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி. சண்முகநாதன் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, கார் பந்தய விவகாரத்தில் நடிகர் அஜித்தின் செயல்பாடுகள் குறித்தும் சண்முகநாதன் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித், 38-வது இடத்தைப் பிடித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், விஜய்க்கு மேல் செல்வாக்கு கொண்ட அஜித் தன் பலம் தெரியாமல் தன்னையே அழித்துக் கொண்டு விஜய்க்கு வால்பிடிப்பதாக விமர்சித்தார். அஜித் திருந்தி ஒழுங்காகத் திரைப்படங்களில் நடித்தால் மட்டுமே தமிழகத்தில் அவருக்கு மரியாதை இருக்கும் என்றும் எச்சரித்தார்.
இறுதியாக, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்ச்சியாக நடிகை திரிஷா அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். சாவு வீடாக இருந்தாலும், கல்யாணமாக இருந்தாலும் அல்லது லண்டன் பயணமாக இருந்தாலும் திரிஷாவை அழைத்துச் செல்வதன் பின்னணியில் என்ன உறவு இருக்கிறது என்பதை விஜய் பகிரங்கமாக விளக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திரிஷா உடன்பிறவா சகோதரியா அல்லது துணைவியா என்பதைத் தெளிவுபடுத்தி, தமிழகத்தின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதை நிறுத்த வேண்டும் எனப் பேசித் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.
