அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிர காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முக்கிய கட்டமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகிகள், அமமுகவை அதிமுகவுடன் இணைக்கவும், அவருக்கு ‘இணை பொதுச்செயலாளர்’ பதவி வழங்கவும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த இணைப்பிற்கு டிடிவி தினகரன் கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்திருந்தாலும், தம்முடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு அதிமுகவில் உரிய பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற முதன்மை நிபந்தனையை முன்வைத்துள்ளார்.
அதேவேளையில், தனக்கு அளிக்கப்படும் இணை பொதுச்செயலாளர் பதவி வெறும் பெயரளவிலான ஒன்றாக இருக்கக் கூடாது என்றும், கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தனக்கு முழுமையான அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பேச்சுவார்த்தையில் தற்சமயம் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், சசிகலாவையும் மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கான இரகசியப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், வேலுமணி தரப்பின் இந்த அதிரடி நகர்வுகள் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்பதால் தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
