சென்னையில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தொகுதிகளைத் தனது கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக மற்றும் தமாகாவிடம் ஒதுக்கீடு செய்ய அதிமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கூட்டணி முழுமையாகக் கைப்பற்றியதுடன், அதிமுகவின் மூத்த தலைவர்களே தோல்வியைத் தழுவினர். தலைநகரில் திமுகவுக்கு இருக்கும் அசைக்க முடியாத பலத்தையும், சிறுபான்மையின வாக்குகளில் தங்களுக்கு இருக்கும் சவால்களையும் கருத்தில் கொண்டு, சவால் நிறைந்த இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளிவிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வியூகத்தின் அடிப்படையில், சென்னையில் சில தொகுதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பாமக மற்றும் தமாகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே.வாசன் தரப்பினர் சென்னையில் போட்டியிடத் தயக்கம் காட்டி வருகின்றனர். பாமக தங்களுக்குச் செல்வாக்குள்ள வன்னியர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் வட மாவட்டங்களான கடலூர், தர்மபுரி, விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் கூடுதல் இடங்களைக் கோருகிறது. அதேபோல், தமாகா தரப்பில் ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு அதிமுக தலைமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம், என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மட்டுமே சென்னையில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, பிராமண சமூகத்தினர் மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர், டி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 6 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது. இதில் துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்துள்ள நிலையில், மற்ற தொகுதிகளுக்காக இரு தரப்பிற்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே வினோஜ் பி செல்வம் மற்றும் எஸ்.ஜி.சூர்யா போன்ற பாஜக நிர்வாகிகள் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
திமுகவின் பலமான களத்தில் நேரடியாக மோதுவதைத் தவிர்த்து, கூட்டணிக் கட்சிகளின் பலத்தை அங்கு பரிசோதிக்க அதிமுக முயல்வது அக்கட்சியின் தேர்தல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளைத் தங்கள் தலையில் கட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவுகிறது. தொகுதிப் பங்கீடு இறுதியாகும் போதுதான், சென்னையில் அதிமுக எத்தனை இடங்களில் நேரடியாகக் களம் காணும் என்பதும், கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த இடங்கள் கிடைக்கும் என்பதும் முழுமையாகத் தெரியவரும்.
