தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் கடந்த சில காலமாகவே உட்கட்சி மோதல்களும், தலைமைப் பண்பு குறித்த அதிருப்திகளும் புகைந்து வருகின்றன. கட்சியின் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்கவும், கட்சியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அரசியல் வியூகங்களுடன் சேர்த்து தற்போது ஆன்மீகப் பரிகாரங்களையும் அவர்கள் நாடியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் ரகசிய வழிபாடுகளை நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் (மே 14) அதிகாலை வேளையில், அ.தி.மு.க.வின் எதிர்காலம் சிறக்க வேண்டியும், தங்களின் அரசியல் கணக்குகள் பலிக்க வேண்டியும் தகுந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் நள்ளிரவு 10 மணியளவில் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தேங்காய் மற்றும் எலுமிச்சம்பழங்களைச் சுற்றி, தீய சக்திகள் மற்றும் கண்திருஷ்டி நீங்குவதற்கான நள்ளிரவு பரிகாரங்கள் விடிய விடிய செய்து முடிக்கப்பட்டுள்ளன.
வெறும் ஆன்மிக வழிபாடோடு மட்டுமல்லாமல், இந்த நிகழ்வின் பின்னணியில் பலத்த அரசியல் நகர்வுகளும் அரங்கேறியுள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.வின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அடுத்தகட்ட வியூகங்கள் குறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இந்த சந்திப்பின் போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கட்சியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை நிலைநிறுத்தவும், தங்களின் எண்ணங்கள் ஈடேறி ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் தங்களது கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்பதுமே இந்த அதிரடி ஆன்மிகப் பரிகாரங்களின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் தலைமைப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த நள்ளிரவு பரிகார அரசியல் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது. மற்றொரு புறம், தமிழக அரசியலில் ‘மாற்று அரசியல்’ பேசும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி கொடுக்க சம்மதித்ததாக அண்மையில் வெளியான தகவல்கள் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய சூழலில், அதிமுகவின் இந்த உள்விவகாரங்கள் மற்றும் பரிகார அரசியல் நகர்வுகளைக் கண்டு, தனது அடுத்தகட்ட கூட்டணி மற்றும் அரசியல் முடிவுகள் குறித்து விஜய் சற்று யோசிக்கத் தொடங்கியுள்ளாரோ என்ற கேள்வியும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
