“அம்மா போட்ட பிச்சை.. எடப்பாடி காலில் விழுந்துட்டு இப்போ”… விஜய்யின் ரகசிய பிளான் இதுதான்… போட்டுடைத்த ஆர்.பி. உதயகுமார்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளோடு உதயமான தமிழக வெற்றி கழகம், தற்போது அரசியல் அனாதைகளாலும் ஆதரவற்றவர்களாலும் நிரம்பி வழிவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய்யை நம்பி கெட்டுப்போனதாக சரித்திரம் இல்லை” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி உழைத்த ஆரம்பகால மன்ற நிர்வாகிகளை விஜய் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டதாக அவர் சாடியுள்ளார். தகுதியும் ஆர்வமும் உள்ள சொந்தக் கட்சித் தொண்டர்களைத் தள்ளி வைத்துவிட்டு, அரசியல் அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அகதிகளாக த.வெ.க.விற்குச் செல்பவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாரி வழங்கி வள்ளலாகக் காட்சியளிக்கும் விஜய்யின் பின்னணியில் ஒரு பெரும் ரகசியத் திட்டம் ஒளிந்திருப்பதாக ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது வெறும் அடைக்கலம் தரும் செயலல்ல என்றும், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அதிமுக என்ற பேரியக்கத்தை அப்படியே அபகரிக்க வேண்டும் என்ற திட்டத்தோடுதான், அடுத்தடுத்து ‘அரசியல் அதிகாரம்’ என்கிற அதிரடி ஆஃபர்களை விஜய் அறிவித்து வருகிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 54 ஆண்டுகால மக்கள் சக்தி கொண்ட அதிமுகவில், ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றி ராஜினாமா நாடகங்களை விஜய் ரசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

   

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அரசியல் வாழ்வாலும், கடந்த பத்தாண்டு காலமாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கைகட்டி காரியம் சாதித்துத் தங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டவர்களுமே தற்போது கட்சி மாறிச் செல்வதாக அவர் சாடியுள்ளார். “நாங்கள் தான் சூராதிசூரர்கள்” என்று மார்தட்டியவர்கள் எல்லாம், இப்போது பனையூர் வாசலில் பூட்டிய கதவைத் தள்ளிக்கொண்டு பதவிப் பிச்சை கேட்டு ஓடுவது, கோடிக்கணக்கான உண்மை விசுவாசத் தொண்டர்களின் நெஞ்சில் ஈட்டியால் பாய்வது போன்ற வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். காட்டிக்கொடுத்துப் பிழைக்கும் இத்தகைய கயவர்களால் விசுவாசத் தொண்டர்களின் கண்ணீரும் வற்றிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

   

கட்சியைத் துரோகம் செய்துவிட்டு, அடுத்தக் கட்சியைக் காப்பாற்றப் போவதாகப் புதிய அவதாரம் எடுக்கும் நபர்களுக்குப் பாதையமைத்துக் கொடுக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார். ஆரம்பத்தில் ‘தூய சக்தி’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, இப்போது எல்லாரும் தூற்றுகின்ற சக்தியாக விஜய் மாறி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். தங்களைப் போற்றுகிற சக்தியாக அவதரிப்பார் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும், விஜய் ஆடி வரும் இந்த அரசியல் ஆடுபுலி ஆட்டத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.