ரிவென்ஞ்ச் டைம்… “வேலுசாமி என்ட்ரி.. வேலுமணி அவுட்”…. எடப்பாடியின் ‘சைலன்ட் வார் ரூம்’…. அதிமுகவில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு..!

By Nanthini on ஆனி 10, 2026

Spread the love

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் முன்னெப்போதையும் விட தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் ரகசியமாக அணி திரண்டு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தி நடவடிக்கையால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கட்சிப் பதவிகளை அதிரடியாகப் பறித்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ‘நிழல் முதல்வர்’ என்றும், எடப்பாடிக்கு அடுத்தபடியாக பவர்புல்லான தலைவராகவும் வலம் வந்த எஸ்.பி.வேலுமணிக்கு இந்த நடவடிக்கை மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் ஏற்பட்ட பனிப்போரின் போது, அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான ‘நமது அம்மா’ நாளிதழ் மற்றும் ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி ஆகியவற்றை வேலுமணி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, வேலுமணியிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆகிய முக்கியப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த வேலுமணி, மீண்டும் எடப்பாடியிடம் சரணடைந்து சமரசம் பேச முயன்றார். தன்னை மீண்டும் பழைய பதவிகளில் அமர்த்துவார் என்று அவர் எதிர்பார்த்த நிலையில், எடப்பாடியோ பதவிகளைத் திருப்பித் தர முடியாது என்பதில் கறாராக உள்ளதாகத் தெரிகிறது.

   

கோவை அதிமுக அலுவலகத்தையும், மாவட்ட அரசியலையும் தன் கைக்குள்ளேயே வைத்திருக்க வேலுமணி பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதையெல்லாம் முறியடித்து, வேலுமணிக்கு மாற்றாக முன்னாள் அமைச்சர் வேலுசாமியை கோவை மாவட்ட செயலாளராக நியமித்தார். வேலுசாமி முறைப்படி பொறுப்பேற்ற நிகழ்வில், வேலுமணியின் ஆதரவாளர்கள் பலர் திடீரென வேலுசாமி பக்கம் சாய்ந்தது கொங்கு மண்டல அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவிற்கு வேலுசாமி நேரடியாக அழைப்பு விடுத்தும் வேலுமணி அதைப் புறக்கணித்ததுடன், சமூக வலைதளங்களில் ஒரு வாழ்த்துப் பதிவைக் கூடப் போடாமல் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

   

கட்சியில் தான் ஓரங்கட்டப்படுவதை சகித்துக் கொள்ள முடியாத வேலுமணி, தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் கற்பிக்கத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ரகசியமாக ஒரு ‘வார் ரூம்’ அமைத்து, எடப்பாடிக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் விமர்சனங்களைப் பரப்பி வருகிறார். தனது பழைய பதவிகளை மீண்டும் வழங்குவதற்கு எடப்பாடிக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்துள்ளாராம் வேலுமணி. அதற்குள் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், ஓ.பன்னீர்செல்வம் பாணியில் மீண்டும் ஒரு ‘தர்மயுத்தம்’ நடத்துவது அல்லது மாற்றுப் பாதை நோக்கி நகர்வது என்ற அதிரடி முடிவில் அவர் இருப்பதாக அறிவாலய மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.