தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கும் விளையாட்டு என்று கூறியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டதற்கு நிதி விரயம் செய்யப்பட்டதாகச் சாடிய அவர், அந்தப் பணத்தை அலங்காநல்லூரில் மூடப்பட்டுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கி அதை மீண்டும் திறந்திருக்கலாம் எனப் பேசினார். தமிழர்களின் வீரத்திற்கும் தொன்மையான பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள தவெக எம்.எல்.ஏ-வின் கருத்து தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, கண்டனக் குரல்களை வலுக்கச் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சிற்கு அதிமுக தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. உலகமே வியக்கும் அலங்காநல்லூர் அமைந்திருக்கும் தொகுதியின் பிரதிநிதியே இப்படிப் பேசியது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள அதிமுக, சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு பெற்றுத் தந்த உரிமையைக் கீழ்த்தரமாகப் பேசியவரின் பேச்சு ஏன் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டிற்கு மீண்டும் தடை கொண்டுவரும் எண்ணத்தில் அதன் ‘ஃபர்ஸ்ட் லுக்’ ஆக முதலமைச்சரே எம்.எல்.ஏ-வை இப்படிப் பேச வைத்தாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. தமிழர்களின் மரபையும் அடையாளத்தையும் கொச்சைப்படுத்திய சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையாவின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
