2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் பெரும் அரசியல் அதிர்வலைகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சி சிதறு தேங்காய் போல உடைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வரும் நிலையில், இதுவரை அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். இதனால், கடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த அதிமுகவின் பலம், தற்போது 41 எம்.எல்.ஏக்களாகக் குறைந்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் நாள்தோறும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும், கட்சி அமைப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சியை தலைமை மேற்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “டிடிவி தினகரன் தற்போது தனியாக ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்; அப்படியிருக்கும்போது அவரை எப்படி நாம் அழைத்து வந்து கட்சியில் சேர்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவை மீண்டும் அசைக்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டுமெனில், தினகரனை கட்சிக்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என நிர்வாகிகள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை உறுதிப்படுத்தினார். “டி.டி.வி. தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்பது எங்கள் பகுதி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் பலத்த எதிர்பார்ப்பு; இந்தக் கருத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று நேரில் தெரிவித்தேன். அதற்கு அவர், ‘அவர் தனியாக கட்சி நடத்தி வருகிறாரே’ என்று பதிலளித்தார். டி.டி.வி. தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைந்தால் கட்சி நிச்சயம் பலமடையும், வருங்காலத்தில் அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமரும்” என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
