கடலூர் நகர்மன்றக் கூட்டரங்கில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை அகற்றுமாறு திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்மன்றக் கூட்டத்தின் போது, “தவெக கவுன்சிலர்கள் யாரும் இல்லாத சூழலில் முதலமைச்சரின் படத்தை இங்கு வைக்கக் கூடாது” என அதிமுக கவுன்சிலர் சுட்டிக்காட்டினார். அதற்கு நகராட்சி ஆணையர், “இது அரசு கட்டிடம் என்பதால் முதலமைச்சரின் படத்தை வைப்பதில் எந்தத் தவறும் இல்லை” எனக் கூறியபோதிலும், “இது மன்றத்திற்குரிய பொதுவான இடம், வேண்டுமென்றால் உங்கள் அறையில் வைத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறி அதிமுக கவுன்சிலரே அப்படத்தை அங்கிருந்து அகற்றியதால் கூட்டரங்கில் பதற்றம் நிலவியது.
விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் அவரது புகைப்படத்தை வைப்பது தொடர்பாகத் தொடர் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. கோவை மாநகராட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் விஜய்யின் படத்தைப் பொருத்த கோவை மேயர் ரங்கநாயகி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதேபோல், நெல்லை மாநகராட்சியில் மேயர் இருக்கைக்கு நேர் மேலே முதலமைச்சரின் படத்தை வைக்க வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தியதால், மேயர் ராமகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ இருக்கையில் அமர மறுத்து சோபாவில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கும் விசித்திரமான சூழல் உருவானது.
இதன் தொடர்ச்சியாகக் குன்னூர் நகராட்சியில் முன்னாள் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் குறித்து தவெகவினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவற்றை அகற்றியதால் அங்கும் வாக்குவாதம் முற்றிப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அரக்கோணம், கரூர் ஆகிய நகராட்சிகளிலும் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்டுவது தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் தவெகவினரிடையே அடுத்தடுத்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பட விவகாரம் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடர் அரசியல் மோதல் புள்ளியாக மாறியுள்ளது.
