பிரபல நடிகையும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளருமான விசித்ரா, சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் அதற்கான அறுவை சிகிச்சை குறித்த தகவல்களைப் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும் டான்ஸராகவும் முத்திரை பதித்த இவர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ள விசித்ரா, சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள எம்.ஜி.எம் (MGM) ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். “வலி நம் வாழ்வைச் சற்றே நிறுத்தி வைக்கலாம், ஆனால் மனித மனதின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு தழும்பும் ஒரு போராட்டத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறது” எனத் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் அவர் விவரித்துள்ளார்.
டாக்டர் மொஹந்தி மற்றும் அவரது மருத்துவக் குழுவினரின் சிறப்பான சிகிச்சையால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாக விசித்ரா குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் தமக்கு உந்துசக்தியாகவும் துணையாகவும் விளங்கிய தனது கணவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். “அன்பும் அரவணைப்பும் இருக்கும் போது எந்த ஒரு நோயிலிருந்தும் மீண்டு வருவது எளிதாகிறது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
விசித்ரா பகிர்ந்த மருத்துவமனை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பெரும் கவலையடைந்தனர். எனினும், அவர் தற்போது குணமடைந்து வருவதை அறிந்து நிம்மதியடைந்த ரசிகர்கள், “தைரியமாக இருங்கள் மேடம், நீங்கள் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் திரும்புவீர்கள்” எனத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவருக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் விளக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
