காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வாசுகி. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் அதிமுகவில் இணைந்து நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். முன்னாள் முதல்வரான ஜெயலலிதா இருந்த வரை வாசுகிக்கு எந்த குறையும் இல்லை.

சமீபத்தில் வாசுகி அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜெயலலிதா அம்மா டாலர் 10 பவுனுக்கு போட்டு இருந்தேன். பணத்தை சேர்த்து வச்சுக்கணும்னு எண்ணம் எனக்கு அப்ப வரல. நான் அனாவசியமாகவும் செலவு பண்ணல. எங்க அம்மாவுக்கு கேன்சர் வந்துருச்சு. அவங்கள பாக்கணும். திடீர்னு எங்க அப்பா வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரு. என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும். அப்படி இப்படின்னு குடும்பத்துக்காக செலவு பண்ணினேன். என் கல்யாணமும் ஃபெயிலியர் ஆகி அந்த ஆளு என் காசை அழிச்சிட்டு போயிட்டான். வேற எந்த விதத்திலும் பணம் வீணா போகல.

கேப்டன் ரொம்ப நல்லவரு. அவர் இறந்தபோது சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்தேன். அந்த நேரத்திலேயும் ஒருத்தர் கிட்ட கடன் வாங்கி காரைக்குடியில் இருந்து வந்தேன். கேப்டன் மனைவியும், அவங்க பசங்களும் என்கிட்ட நல்லா தான் பேசினாங்க. நான் அவங்கட்ட உதவி கேட்க நினைக்கல. ஆனா பேஸ்புக், சோசியல் மீடியால கேப்டன் மனைவி உதவி பண்றாங்கன்னு சொன்னாங்க. அதை நம்பி நான் அவங்க வீட்டுக்கு போனேன். அவங்க என்ன உட்கார வைத்து காபி கொடுத்து நீங்க இவ்ளோ பிட்டா இருக்கீங்களே உங்களுக்கு யாரும் வேலை கொடுக்கலையா?

நீங்க வேலைக்கு எங்கேயும் போகலையா? முடிஞ்சா உங்க நம்பரை கொடுத்துட்டு போங்க. எங்களால முடிஞ்ச உதவிய நாங்க பண்றோம் அப்படின்னு சொல்லி என் நம்பரை வாங்கினாங்க. நான் நீங்களே உங்க கல்யாண மண்டபத்தில் எனக்கு வேலை கொடுங்களேன். இல்லைனா கேப்டனை அடக்கம் பண்ணியிருக்கிற இடத்துல எனக்கு வேலை கொடுங்க. அங்கேயே இருந்து விளக்கு ஏத்துறேன். கூட்டி பெருக்கி இடத்தை சுத்தம் பண்றேன்னு சொன்னேன். ஆனா அவங்க பதிலே பேசாம 1000 ரூபாயை கைல கொடுத்து அனுப்பிட்டாங்க என வாசுகி கூறியுள்ளார்.

