கேரளாவில் ஒரு முன்னணி நடிகை கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நடந்த இந்த துயரமான நிகழ்வு தற்போது ஒன்பது ஆண்டுகளை எட்டியுள்ளது. மலையாள திரையுலகை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நடிகர் திலீப் உள்ளிட்ட பலரைச் சுற்றிய பல திருப்பங்களுடன் கூடிய நீண்ட சட்டப் போராட்டத்தை உருவாக்கியது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் சிலரையும் போலீசார் கைது செய்தனர். ஆரம்ப விசாரணையில் இந்த பலாத்கார சம்பவத்திற்கு பின்னணியில் ஒரு பெரிய சதித்திட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தது. இது ஒரு சாதாரண கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்கு கிடையாது என்று அப்போது புரிந்தது.
இந்த வழக்கில் நடிகர் திலீப் பெயர் முதலில் வெறும் வதந்திகளாக பரவிய நிலையில் அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் திலீப் சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடைய கைது மலையாள திரை உலகில் பரபரப்பை கிளப்பி இருந்தது. சுமார் 85 நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்ற வந்த நிலையில் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நடிகர் திலீப்பை விடுதலை செய்தது எர்ணாகுளம் நீதிமன்றம். இந்த சம்பவத்தில் ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் திலீப் குமார் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திலீப் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். அதில், பொய்யான வழக்கால் சினிமாவில் தனது புகழ், நற்பெயரை சீர்குலைக்க நினைத்தவர்களின் எண்ணம் பொய்யாகிவிட்டது. மேலும் இந்த வழக்கிற்காக கடந்த 9 ஆண்டுகளாக எனக்கு துணை நின்ற சினிமா மற்றும் சட்ட நிபுணர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
