80களின் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த சொந்தச் சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது மிகப்பெரிய பணத் தகராறு ஏற்பட்டுள்ளது. நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது அக்கா அம்பிகா நாயர் மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் ஆகியோர் மீது சுமார் ரூ.43.62 கோடி ரூபாய் அளவிற்குப் பழைய காசோலைகளைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றதாகக் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
போரூரில் “RR Gardens” என்ற பெயரில் தொழில் நடத்தி வரும் ராதா, அவசரத் தேவைகளுக்காகத் தனது அறையில் கையெழுத்திட்டு வைத்திருந்த பழைய ஐடிபிஐ வங்கியின் காசோலைகளை, அவரது அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் இணைந்து திருடியுள்ளனர். பயன்பாட்டில் இல்லாத அந்த 5 பழைய காசோலைகளில் தொகையை நிரப்பி, அம்பிகாவின் பெயரில் பணமாக்க முயன்றதை வங்கி நிர்வாகம் மின்னஞ்சல் மூலம் ராதாவுக்கு எச்சரித்ததால் இம்மாபெரும் மோசடி உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும், வளசரவாக்கத்தில் உள்ள வீட்டின் அறைக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து நகைகள், சொத்துப் பத்திரங்கள் மற்றும் வங்கி ஆவணங்களைத் தங்களை மீறிச் சரிபார்க்க விடாமல் தடுத்து வருவதாகவும் ராதா தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்துச் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
