தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி.இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கௌதமி 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் ஏமாற்றி விட்டதாக கூறி புகார் அளித்துள்ளார். தான் 17 வயதில் இருந்து இதுவரை 125க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன்.
2004 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது சினிமாவில் இருந்து நான் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன். அப்போது நான் சம்பாதித்த பணத்தை வைத்து ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கி இருந்தேன். தற்போது அந்த இடத்தின் மதிப்பு 25 கோடியாகும். என்னுடைய குடும்ப தேவைக்கு மருத்துவ சிகிச்சைக்கும் அந்த இடத்தை விற்கலாம் என முடிவு செய்ததால் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவரிடம் தொடர்பு கொண்டு எனது நிலத்தை விற்று கொடுக்குமாறு கேட்டேன்.
அந்த நிலத்தை விற்று தருவதற்கான பவர் ஏஜென்ட் உரிமையை அவரிடம் கொடுத்த நிலையில் அவர் என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். எனக்கு சொந்தமான விவசாய நிலத்தை நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து தனக்கு 62 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தார். என்னுடைய எட்டு ஏக்கர் நிலத்தை அபகரித்து அவர் மோசடி செய்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு சொந்தமான 25 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌதமி புகார் அளித்துள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.