அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் ’96’ பட நடிகை கௌரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. கடந்த 30-ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாடல் காட்சியில் நடிகையைத் தூக்கியதை குறிப்பிட்டு நடிகையின் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதை ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கௌரி கிஷன் விமர்சித்து, இது போன்ற முட்டாள்தனமான கேள்விகள் சரியல்ல என்று கூறினார்.
சமீபத்தில் நடந்த மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் இரு யூடியூபர்கள் கௌரி கிஷனை குறிவைத்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த கௌரி கிஷன், உடல் எடை குறித்த கேள்வி உருவக் கேலிக்கு சமம் என்றும், கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் எடை தொடர்பான கேள்வி என்பதால் நான் விமர்சித்தேன் என்றும் அமைதியாக விளக்கினார்.
கௌரி கிஷனின் தைரியமான பதில் இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்றது. பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து கூறியது. இந்தச் சம்பவம் குறித்து கௌரி கிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “வார தொடக்கத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டமானது. ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேள்விகள் எந்தச் சூழலிலும் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் அந்த யூடியூபரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்.
விமர்சனங்கள் என் தொழிலின் பகுதி என்பதை அறிவேன். ஆனால் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் உறுதியாக நிற்பது என் பொறுப்பு என்று நினைக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல, இதே போன்ற அனுபவங்களை சந்தித்த அனைவருக்கும். படம் மற்றும் என் நடிப்பு குறித்த கேள்விகளையே நான் விரும்புகிறேன். கடினமான சூழலில் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
எனக்கு நடந்தது புதிதல்ல. இது பல இடங்களில் நடக்கிறது. உடல் கேலி செய்வதை இயல்பாக்குகிறது. நமது அசௌகரியத்தை வெளிப்படுத்தவும், தவறை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு. எனக்கு கிடைத்த அனைத்து ஆதரவுக்கும் நன்றி. இது எதிர்பாராதது. சென்னை பத்திரிகையாளர் மன்றம், அம்மா சங்கம் (மலையாள திரைத்துறை), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்றி. பத்திரிகைகள், ஊடகங்கள், பொதுமக்களின் உறுதியான ஆதரவுக்கு நன்றி. எனது சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் தொழில்துறை அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
