தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
அப்படிதான் அவர் நடித்த தமிழன் படத்தில் உலக அழகியான பிரியங்கா சோப்ராவை நடிக்க வைத்தனர். ஆனால் அந்த படத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய்தான் நடிக்க வேண்டும் என விஜய் விரும்பினாராம். ஏனென்றால் அப்போது அவர் இந்தியா முழுவதும் பயங்கர பிஸியான நடிகையாக இருந்தார். இதையடுத்து தயாரிப்பு தரப்பு ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளது.
ஆனால் இந்த படத்தில் நடிக்க மறுத்த ஐஸ், “விஜய்யுடன் நான் நடிக்க மாட்டேன். அவர் என்னைவிட இளையவராக தோன்றுவார். அதனால் ஜோடிப் பொருத்தம் செட் ஆகாது” என சொல்லிவிட்டாராம். இந்த தகவலை பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு முன்னர் தமிழில் பிரசாந்த் மற்றும் அப்பாஸ் ஆகியோருக்கெல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார். அவர்களுக்கும் விஜய் வயதுதான். மற்றும் விஜய் போன்ற தோற்றம் கொண்டவர்கள்தான். ஆனால் விஜய் படத்தை மட்டும் ஏன் இப்படி ஒரு காரணம் சொல்லி மறுத்தார் என்பது குழப்பமாக உள்ளது.