தமிழ் திரையுலகில் ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட் வரை தடம் பதித்துள்ள நடிகை டாப்ஸி பண்ணு, அவ்வப்போது சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் தனது துணிச்சலான கருத்துக்களைப் பகிர்ந்து வருபவர். அந்த வகையில், தனது புதிய படமான ‘ஆஷி’ (Aashi) படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களான நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரில் உங்களை கவர்ந்தவர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு டாப்ஸி அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேள்விக்கு பதிலளித்த டாப்ஸி, “நான் இந்த நாட்டில் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும், அதனால் எனது பதில் மோடி தான்” என்று நகைச்சுவை கலந்த நக்கலுடன் பதிலளித்தார். டாப்ஸியின் இந்த பதில் இருவேறு விதமாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் நிம்மதியாக வாழ முடியும் என்று அவர் கூறுவதாக ஒரு தரப்பினரும், மோடி அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தால் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்பதைத் தான் அவர் மறைமுகமாகச் சாடுகிறார் என்று மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் விளக்குகளை அணைத்து சத்தம் எழுப்ப வேண்டும் என்று பிரதமர் கூறியபோது, “நமக்கு புதிய வேலை கிடைத்துவிட்டது” என்று டாப்ஸி கிண்டலாகப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அளித்துள்ள இந்தப் பதிலும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை டாப்ஸியின் இந்தப் பேச்சு அவர் எதார்த்தமாகச் சொன்னதா அல்லது கிண்டலாகச் சொன்னதா என்பது குறித்து நெட்டிசன்கள் பலவாறாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
