கடந்த 2004ம் ஆண்டில் விஜய் திரிஷா நடிப்பில் வெளியான படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் பிரதான வில்லனாக முத்துப்பாண்டி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் இந்த படத்தில் கபடி வீரராக நடித்திருப்பார். மதுரையில் கபடி விளையாட செல்லும் நடிகர் விஜய், அங்கு திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்படும் திரிஷா வீட்டை விட்டு தப்பி ஓடி வர அவரைக் காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருவது தான் கில்லி படத்தின் மையக்கதை.
இந்த படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் ஏற்கனவே கடந்த 2024ம் ஆண்டில் இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததை விட பல கோடிகள் ரூபாய் வசூலை அள்ளியது. இப்போது மீண்டும் 2வது முறையாக வருகிற 20ம் தேதி கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. ஜனநாயகன் படம் திரைக்கு வராத நிலையில், திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம், இந்த படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்வதாக தெரிவித்துள்ளது.
