நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது ஏறக்குறைய 90 சதவீதம் உறுதியாகி விட்டது. இன்னும் 10 சதவீத பணிகளை முடித்த பின், ஏப்ரலில் இதுபற்றிய அதிகாரபூர்வமாக அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட இருக்கிறார் என்ற பரபரப்பு நாளுக்கு நாள் தமிழக மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம் விரைவில், அரசியல் கட்சியாக மாற்றம் செய்யப்படுகிறது. இதில் உள்ள நிர்வாகிகள் எல்லாமே, கட்சி பொறுப்புகளுக்கு மாற்றப்பட உள்ளனர். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நேரடியாக எதிர்கொள்ள தயாராகி வருகிறார் விஜய் என்பது, கடந்த சில ஆண்டுகளாக அவரது நேரடி நடவடிக்கைகளில் தெரிந்து வருகிறது.
அனைவரும் காரில் வந்து தேர்தலில் ஓட்டுப்போட்ட போது, அவர் சைக்கிளில் சிங்கிளாக வந்து ஓட்டுப்போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை சென்னைக்கு நேரில் வரவழைத்து 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் என பரிசுத்தொகை தந்து, பெற்றோருடன் அவர்களை மேடையேற்றி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இப்போது தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதற்கிடையே கோட் படத்தில் நடத்தி வரும் விஜய், இந்த படப்பிடிப்பை மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். வரும் ஏப்ரலில், கட்சி துவங்க தேவையாக ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது, மதுரையில் இந்த மாநாடு, கமகம பிரியாணி விருந்துடன் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தனது கட்சி பெயரை, விஜய் அறிவிக்கிறார். கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநாட்டில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தும் விஜய், தனது கட்சி, கொள்கைகள் குறித்து மாநாட்டில் பேச இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.