தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்றது குறித்து, பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடலூர் வி ஸ்கொயர் மாலில் ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கருத்துக்கணிப்புகளில் விஜய்யின் கட்சிக்குக் குறைவான இடங்களே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த போதும், தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத் தான் இறைவனை வேண்டிக்கொண்டதாகக் குறிப்பிட்டார். விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், விஜய் முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதால், இனி அவரைத் திரையில் பார்க்க முடியாது என்ற வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தினார். “அவர் முதலமைச்சரானது மகிழ்ச்சி என்றாலும், ஒரு நடிகையாக எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது; ஒரு சிறந்த நடிகரைத் திரையுலகில் நாங்கள் மிஸ் செய்கிறோம்” என்று தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும், தங்களின் ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு மக்கள் அளித்து வரும் பேராதரவிற்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா லட்சுமி, இளைஞர்கள் அனைவரும் ஒழுக்கத்தையும் சுய கட்டுப்பாட்டையும் வளர்த்துக்கொள்ள ஏதேனும் ஒரு விளையாட்டைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
