இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ‘கற்றது தமிழ்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் ராம் மற்றும் நடிகை அஞ்சலி கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, நடிகை அஞ்சலி குறித்துப் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “அஞ்சலி ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் அவர் தான் வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். சிரிப்போடுதான் வருவார். மெதுவாக வருவது, இரண்டு விரல்களில் சாப்பிடுவது போன்ற அலட்டல்கள் எல்லாம் அவருக்கு வராது. கொஞ்சம்கூட ஒளிவு மறைவு இல்லாதவர்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழில் ‘கற்றது தமிழ்’ ஆனந்தி, ‘அங்காடித் தெரு’ கனி போன்ற காலத்தால் அழியாத கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்த அஞ்சலி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராம் இயக்கத்தில் களமிறங்கியுள்ளதால், இத்திரைப்படம் அவருக்கு மற்றொரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
