தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்து அதன் பின்னர் வெண்னிலா கபடிக்குழு படம் மூலமாக பரோட்டா சூரியாக அறியப்பட்டு அதன் பின்னர் காமெடி நடிகராக வளர்ந்து வந்தார் சூரி. இவரது இயற்பெயர் ராமலக்ஷ்மணன் முத்துசாமி என்பதாகும். 1998ல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தார் சூரி. ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் சூரி.

2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சூரி. இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 50 பரோட்டாக்களை சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு அந்த காமெடி மிகவும் பிரபலமானதால் இவரை பரோட்டா சூரி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர்.அதற்குப் பிறகு சுந்தர பாண்டியன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ஜில்லா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

கடந்த ஆண்டு வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறன் சூரியை நாயகனாக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட விடுதலை 2 திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்திலும் கதாநாயகனாக சூரி அசத்தி இருந்தார். தற்போது சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மாமன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், நான் முதல் முதலில் சினிமாவுக்கு வந்த காரணமே நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகள் தான் உள்ளே வந்தேன். முதலில் எப்படியோ முட்டி மோதி உள்ளே வந்த பிறகுதான் தெரிந்தது சினிமா எவ்வளவு கஷ்டம் என்று. சினிமா என்ற ஒரு முழு சுவரை தெரிந்து கொள்வதற்கே எனக்கு பல வருடங்கள் ஆகிவிட்டது. எப்படியோ சென்னைக்கு வந்து விட்டோம் இங்கே உண்பதற்கும் உறங்குவதற்கும் ஒரு இடம் வேண்டும் அதற்கு கட்டாயம் பணம் வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். அப்படித்தான் ஏதாவது ஒரு வேலையை செய்து சென்னையில் முதலில் பிழைப்பு நடத்தினேன்.

ஒரு கட்டத்தில் இதெல்லாம் வேணாம் விட்டுட்டு அப்படியே ஓடிடலாம் என்றெல்லாம் தோணுச்சு. ஆனா எப்படி யோ சினிமா ஆசையில உள்ள வந்துட்டோம் ஏதாவது பண்ணி சாதித்து ஆகணும் என்ற துடிப்பு இருந்ததால் ஒரு வேலையை பார்த்துக்கிட்டே சினிமாவுல வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தேன். என்ன பொறுத்த வரைக்கும் மத்தவங்க மாதிரி போட்டோ கொடுத்துட்டு நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றெல்லாம் சொல்லிட்டு வர மாட்டேன்.
போட்டோ கொடுத்துட்டு ஏதாவது டைரக்டர் வர வரைக்கும் அங்கேயே வெளியில வெயிட் பண்ணிட்டு அவங்க வந்ததுக்கு அப்புறம் கட்டாயம் அடம்பிடிச்சு நடிச்சுதான் காமிப்பேன். நிறைய பேர் கிட்ட நடிச்சு காமிச்சிருக்கேன். அதுலயும் சிலர் உனக்கெல்லாம் வேலையே இல்லையா நீ நடிக்கிறத பாக்குறது தான் எங்களுக்கு வேலையா என்றெல்லாம் திட்டி துரத்தி விடுவாங்க. இருந்தாலும் பல பேர் கிட்ட கெஞ்சி கூத்தாடி நடிக்காம அங்கிருந்து கிளம்பவே மாட்டேன். நான் சினிமாவில் வரதுக்கு முன்னாடி பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் எதையுமே நான் மறக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் அது என் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று சூரி எமோஷனலாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
