தமிழ் சினிமாவில் 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் சிவகுமார். இந்தத் திரைப்படத்தில் டி ராஜேந்தர் நாயகனாக நடிக்க சுரேந்தர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சிவகுமார் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் சிவகுமாருக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சிவகுமாருக்கு ஏவிஎம் தயாரிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் முதல் முறையாக இணைந்து நடிப்பதால் அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்த சிவக்குமாருக்கு எம்ஜிஆர் அழைத்து தன்னுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பை வழங்கினார். சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த படத்தில் நடிக்க மறுத்த சிவக்குமார் அடுத்து காவல்காரன் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடித்தார். இந்தப் படம் தான் எம்ஜிஆர் மற்றும் சிவக்குமார் இணைந்து நடித்த முதல் படமாகும். 1967 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்ஜிஆர் அண்ணனாகவும் சிவகுமார் அவரின் தம்பியாகவும் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்தார். ஒரு நல்ல நடிகராக மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஓவியக் கலைஞராக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டவர் தான் சிவகுமார். இவருடைய இரண்டு மகன்கள் ஆன சூர்யா மற்றும் கார்த்தி தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சிவகுமார் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சிவாஜி படம் குறித்து பேசி உள்ளார். அதில், சினிமாவில் இதுவரை நான் பார்த்த வியந்த படங்கள் 14 தான். அதில் மறக்க முடியாத சிவாஜி படம் என்றால் பராசக்தி திரைப்படம் தான்.

எனக்கு பத்து வயது இருக்கும் போது இந்த படத்தை நான் பார்த்தேன். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்க கிராமத்துக்கு போற வழியில ஒரு பெட்டிக்கடை இருக்கும். அதுக்கு பக்கத்துல பராசக்தி படத்தின் போஸ்டர் வச்சிருந்தாங்க. அதில் அம்மன் சிலைக்கு நடுவில் சிவாஜியின் தலை வெளியே வரும். வேர்த்து விறுவிறுத்து ஒரு கொடூரமான முகத்தோட அதுல இருப்பாரு. அப்புறமா அந்த படத்தை போய் பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு பைத்தியமே பிடிச்சிருச்சு. என் வாழ்க்கையில் அந்த படத்தை மறக்கவே முடியாது என்று சிவகுமார் பேசியுள்ளார்.
