80 களில் ரஜினிக்கு டஃப் கொடுத்த நடிகர் செந்தாமரை… திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பாக்கியராஜ்!

By vinoth

Published on:

ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படங்களை எடுத்துப் பார்த்தால் அதில் அவருக்கு இணையாக வில்லன்களின் கதாபாத்திரம் மிக வலுவாக உருவாக்கப் பட்டிருக்கும். 80 களில் நடிகர் செந்தாமரையும் 90 களில் ரகுவரனும் ரஜினி படத்தின் ஆஸ்தான வில்லன்களாக வலம் வந்தனர்.

பொல்லாதவன், கழுகு, மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, அதிசயப்பிறவி என ஏராளமான படங்களில் நடித்து கொடூர வில்லன் என்ற அடையாளத்தைப் பெற்றவர் செந்தாமரை. பழம்பெரும் நாடக நடிகரான செந்தாமரை இயக்குனர் மகேந்திரனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். மகேந்திரன் எழுதிய மேடை நாடகங்களில் எல்லாம் அவருக்கு நல்ல பாத்திரங்களை உருவாக்கி தந்தார்.

   

நாடகம் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் அவர் சவாரி செய்துகொண்டிருந்தார். ஆனால் அவருக்கு வந்த வேடங்கள் எதுவும் பேர் சொல்லும் வேடங்களாக அமையவில்லை. 60 களிலேயே சினிமாவில் அறிமுகமாகிவிட்டாலும் அவருக்கு சில காட்சிகளில் வந்து செல்லும் வேடம்தான் கொடுக்கப்பட்டு வந்தது.

அப்போது ஒருநாள் பாக்யராஜை சந்தித்த செந்தாமரை ‘சார் நான் நல்லா நடிப்பேன். ஆனால் எனக்கு சினிமாவில் இன்னும் சரியான வேடம் அமையவில்லை. உங்கள் படத்தில் எதாவது நல்ல வேடம் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அப்போதுதான் தூறல் நின்னு போச்சு படத்தில் கதாநாயகியின் அப்பாவான பொன்னம்பலம் என்ற பிடிவாதம் பிடித்த கதாபாத்திரத்தை அவருக்குக் கொடுத்துள்ளார்.

அந்த படம் ரிலீஸானதும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதன் பின்னர்தான் அவருக்கு பல நல்ல வேடங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக ரஜினி படங்களில் தொடர்ந்து வில்லனாக அவர் நடிக்க வைக்கப்பட்டார்.மூன்று முகம் படத்தில் ரஜினிக்கு இணையாக மிரட்டலான வில்லன் நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பார். காவல் நிலையத்தில் இருவரும் மாறி மாறி வசனங்களால் மோதிக்கொள்ளும் காட்சி இன்றளவும் ரசிக்கப்படும் காட்சியாக உள்ளது.

பிஸியான நடிகராக இருக்கும் போதே 1991 ஆம் ஆண்டு செந்தாமரை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் மனைவியான கௌசல்யா இப்போது சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.