சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்த நிலையில் விஜய் சேதுபதி உடன் நயன்தாரா, பார்த்திபன், ராதிகா மற்றும் ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலமாகத்தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் கதை உருவானது. இருவரும் அப்போது காதல் வலையில் சிக்கிய நிலையில் சுமார் ஏழு வருடங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதல் குறித்து ஆர்.ஜே பாலாஜி சமீபத்தில் நடித்த பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தது ஊருக்கே தெரிவதற்கு முன்னாடி எனக்கு தான் முதன்முதலில் தெரிந்தது. அவர் என்கிட்ட தான் முதலில் அந்த விஷயத்தை சொன்னாரு. இருந்தாலும் அப்படியா என்று நான் பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. விக்னேஷ் சிவன் எப்படிப்பட்ட மனிதர் என்றால் சாதாரணமாக அவரிடம் பேசினாலே ரொமான்ஸ் பொங்கும். அவர் எழுதக்கூடிய பாடல்களில் பார்த்தாலே அவர் எந்த அளவிற்கு உரிய உருகி காதலிக்க கூடிய மனிதர் என்பது நன்றாகவே தெரியும்.

நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது நான், விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி என எல்லோரும் ஒரு தனி கேங்காக இருந்தோம். நயன்தாரா மற்றும் பார்த்திபன் சார் தான் பெரிய ஸ்டார் ஆக எங்களுக்கு தெரிஞ்சவங்க. நாங்க எல்லாரும் டீமா ஒர்க் பண்றதா பார்த்து நயன்தாரா ஆச்சரியப்பட்டாங்க. விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலிப்பதாக என்கிட்ட சொன்னதும் நான் எதுவுமே ஆச்சர்யப்படவில்லை. அது அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள தனிப்பட்ட விஷயம் என்பதால் சரி ஓகே என்று மட்டும் நான் கேட்டுக்கொண்டேன் என ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார்.
