நடிகர் ரவி மோகன் செப்டம்பர் 10-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், அதனையொட்டி சென்னையில் தனது ரசிகர்களை நேரில் அழைத்து பிரம்மாண்டமாகச் சந்தித்துப் பேசினார். மனைவி ஆர்த்தியுடனான பிரிவு மற்றும் கெனிஷாவுடனான சர்ச்சை எனப் பல்வேறு தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு மத்தியில் நடந்த இந்தச் சந்திப்பில், திரளான ரசிகர்கள் கலந்துகொண்டு ரவி மோகனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரசிகர் ஒருவர், “அண்ணா நீங்கள் கொடியைக் கொடுங்கள், நாங்கள் உங்களுக்குக் கோட்டையைப் பிடித்துத் தருகிறோம்” என முழங்கியதால், ரவி மோகனும் அரசியலுக்கு வரத் திட்டமிடுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரசிகர்களின் அளவற்ற அன்பைக் கண்டு மேடையிலேயே கண் கலங்கிய ரவி மோகன், “எனக்கு நம்பிக்கை தருவது ரசிகர்கள் மட்டும்தான் என கடவுளே கனவில் வந்து சொன்னது போல் இருந்தது. நீங்கள் காட்டும் இந்த அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது” என மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உருக்கமாகப் பேசினார்.
