சென்னை தி நகர் பகுதியில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர் கடந்த 11ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பைக்குள் கிடந்த கவர் ஒன்றில் 45 சவரன் தங்க நகைகளை அவர் கண்டெடுத்தார். அந்த நகைகளை அவர் உடனடியாக பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
ஏழ்மையான நிலையிலும் தூய்மை பணியாளர் பத்மாவின் இந்த நேர்மையான செயல் மக்கள் மத்தியில் பெரிய பாராட்டைப் பெற்றது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பத்மாவின் நேர்மையை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் அழைத்து இன்று பாராட்டினார். அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் டாலருடன் தங்க செயின் ஒன்றை பத்மாவுக்கு அன்பளிப்பாக பரிசளித்தார். மேலும் பத்மா மற்றும் அவரது குடும்பத்துடன் அவர் உரையாடினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
