தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த பிரபுதேவா இந்தி சினிமாவுக்கு சென்று அங்கு நடன இயக்கத்தில் சிறந்து விளங்குகிறார். தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்கள் இயக்கவும் செய்கிறார். தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான கோர்ட் திரைப்படத்தில் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்த நிலையில் அந்தப் படத்தில் பேட்ட ராப் பாடல் இன்றும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த வார்த்தையையே தன்னுடைய படத்திற்கு பிரபுதேவா டைட்டில் ஆக வைத்துள்ளார். தற்போது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகை சன்னி லியோனுடன் பல்வேறு இடங்களில் பிரமோஷன் செய்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் தற்போது தமிழகத்தில் நடைபெற்று உள்ளது.

இந்த விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய நடிகர் பிரபுதேவா, நான் 11 ஆம் வகுப்பை தாண்டவில்லை, என்னுடன் அதிகம் படித்தவர்களை பார்த்தாலே பிரம்மிப்பாக இருக்கும். நான் படிக்கும்போது யாரும் 11-ம் வகுப்பில் பெயில் ஆக மாட்டார்கள். அப்படி இருக்கும்போது நான் பெயில் ஆனேன். பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்களை பார்த்து ஆச்சரியப்படும் நான் காலேஜ் படிப்பவர்களை பார்த்து மேலும் ஆச்சரியப்படுவேன். அதனைப் போலவே சினிமாவில் லிரிக்ஸ் எழுதுபவர்களை பார்த்தாலும் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கும் என விழாவில் பிரபுதேவா பேசினார்.
