தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவை ஆதரித்து, பிரபல நடிகர் பொன்னம்பலம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் நடமாடி வந்த பொன்னம்பலம், தற்போது முழு ஆரோக்கியத்துடன் எழுந்து வந்து மக்களிடையே வாக்கு சேகரித்தது அவரது ரசிகர்களுக்கும் கட்சியினருக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில், நட்சத்திரப் பேச்சாளராகக் களம் இறங்கியுள்ள பொன்னம்பலத்தின் வருகை அந்தத் தொகுதியில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
பிரச்சாரத்தின் போது உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய பொன்னம்பலம், தவெக தலைவர் விஜய் மக்களுக்காகத் தனது கோடிக்கணக்கான வருமானத்தைத் தியாகம் செய்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாகப் பாராட்டினார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் பாணியில், “பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்வியை முன்வைத்த அவர், விஜய் இன்று மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்றார். மேலும், கம்பம் வேட்பாளர் மிஸ்ராவைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், “மிஸ்ராவை மிஸ் பண்ணிடாதீங்க; அவரை மிஸ் பண்ணா வாழ்க்கையவே மிஸ் பண்ண மாதிரி” எனத் தனது பாணியில் பேசி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
