இஸ்லாமாபாத்தின் செரீனா ஹோட்டலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்கக் குழுவும், முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான ஈரானியக் குழுவும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் முன்னிலையில் இரண்டு நாட்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, பிரதிநிதிகள் அனைவரும் வெளியேறிய நிலையில், தற்போது அந்த ஹோட்டலின் கோடிக்கணக்கான ரூபாய் கட்டண ரசீதை யார் செலுத்துவார்கள் என்ற விவாதம் சமூக ஊடகங்களில் பூதாகரமாக வெடித்துள்ளது.
சொந்த நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கவே நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான், வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகளுக்காகத் தலைநகரில் இரண்டு நாள் விடுமுறை அறிவித்து, ஹோட்டலையே கோட்டையாக மாற்றி அரச விருந்தோம்பல் அளித்தது பெரும் முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது. கபாப் முதல் காஷ்மீரி தேநீர் வரை தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், இறுதியில் எந்த முடிவும் எட்டப்படாதது அந்த நாட்டு அரசுக்கு இரட்டிப்புச் சுமையாக மாறியுள்ளது. விருந்தினர்கள் சென்ற பிறகு, அந்தப் பெரும் தொகையைக் கையாள முடியாமல் பாகிஸ்தான் நிர்வாகம் திகைத்து நிற்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இந்திய நடிகர் பரேஷ் ராவலின் நையாண்டி கலந்த பதில் புண்ணில் உப்பைத் தேய்ப்பது போல் அமைந்துள்ளது. ஹோட்டல் கட்டணத்தை யார் செலுத்துவார்கள் என்று எக்ஸ் (X) தளத்தில் எழுந்த கேள்விக்கு, அவர் தனது பாணியில் “IMF” (சர்வதேச நாணய நிதியம்) என்று பதிலளித்துள்ளார். பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களையே நம்பியிருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த இந்தப் பதில், இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
பாகிஸ்தானின் ‘கடன் வாங்கும்’ கலாச்சாரத்தை விமர்சிக்கும் வகையில், அடுத்த முறை ஐஎம்எஃப்-யிடம் கடன் கேட்கும்போது ‘அமைதிப் பேச்சுவார்த்தை ஹோட்டல் கட்டணம்’ என்ற காரணத்தையும் அந்த நாடு சேர்க்கக்கூடும் என்று மக்கள் கேலி செய்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஏற்படுகிறதோ இல்லையோ, செரீனா ஹோட்டல் உரிமையாளருடன் பாகிஸ்தான் அரசு நடத்தப்போகும் ‘கட்டணப் பேச்சுவார்த்தை’ தான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. இந்தக் கடனை அடைக்க பாகிஸ்தான் மீண்டும் சீனாவிடமோ அல்லது சவுதி அரேபியாவிடமோ கையேந்தும் சூழலே நிலவுகிறது.
