தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
அப்படி அவர் மண்வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் நடிகர் பாண்டியன். மண்வாசனை படத்துக்காக நடிகர் தேர்வு நடந்த போது எதேச்சையாக ஒரு கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனைப் பார்த்து தேர்வு செய்துள்ளார். அதே போல கேரளாவைச் சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை அறிமுக நடிகையாக தேர்வு செய்து அவருக்கு ரேவதி என்ற பெயரையும் கொடுத்தார்.
பாரதிராஜா நடிகர் நடிகைகளிடம் மிக அழகாக நடிப்பை வாங்குவார். நடிக்க தெரியாதவர்களுக்கு தானே எவ்வாறு நடிக்கவேண்டும் என சொல்லிக் கொடுத்தும் விடுவார். அப்படியும் அவர்கள் சரியாக நடிக்கவிலை என்றால் அவர்களை ஒரு வாத்தியார் போல அடித்தும் வேலைவாங்குவார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்கள் அனைவருமே அவரிடம் அடிவாங்கியவர்கள்தான் என்று சொல்லலாம்.
இந்நிலையில் மண்வாசனை படத்தின் போது க்ளைமேக்ஸ் காட்சியில் தன்னைக் கத்தி பேச சொல்லி பாரதிராஜா அடித்ததாகவும், அதனால் அந்த காட்சியில் தான் சிறப்பாக நடித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் பாரதிராஜாவுக்கு முன்பே பாண்டியன் என்னை அறைந்துவிட்டார் என்று கூறியுள்ளார். ‘படத்தில் பாண்டியன் என்னை அறைவது போல ஒரு காட்சி வரும். அதில் அவர் திரும்பி திரும்பி என்னை சரியாக அறையாமல் சொதப்பினார். பாரதிராஜா அவரை அழைத்து பளார் என்று அறைந்து ஒழுங்காக அறை என்று சொன்னார். அவர் வந்து என்னை பளார் என்று அறைந்துவிட்டார். எனக்கு ஒன்றுமே தெரியவில்லை, காதெல்லாம் கொய்ங் என்று சத்தம்தான் கேட்டது” எனக் கூறியுள்ளார்.