தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு அடுத்து நடிப்பிற்காக எதையும் செய்ய துணிபவர் நடிகர் நாசர். எந்த ஒரு கேரக்டரைக் கொடுத்தாலும் அதற்கு தனது நடிப்பால் உயிர் கொடுக்கும் வித்தைக்காரர். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்களைப் போலவே நாசரும் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கண்டுபிடிப்பு தான். தனது கல்யாண அகதிகள் என்ற படம் மூலமாக நாசரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

ஒல்லியான தேகம், ஒடிசலான முகத்துடன் குடிகார கணவனாக நடித்த நாசர் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராக மாறுவார் என யாரும் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு தனித்துவமான வில்லன் நடிகரை அடையாளம் காட்டியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் மொத்தம் எட்டு மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை வாய்ந்த நடிகரான நாசர் இந்தியாவில் பல மொழிகளில் நடித்து இன்றுவரை தனித்துவமான சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நாசரின் வீட்டில் இன்று ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

95 வயதாகும் இவரது தந்தை மெகபூப் பாஷா இன்று வயது மூப்பு மற்றும், உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் குறித்து கேள்வி பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இணையத்தில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
