நடிகர் மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். கடந்த 1994-ஆம் ஆண்டு சரத்குமாரின் நாட்டாமை படத்தில் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நடிகர் பாண்டியராஜுடன் இணைந்து தாய்க்குலமே தாய்க்குலமே படத்திலும் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது மகேந்திரனுக்கு கிடைத்தது. பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோபாலா கோபாலா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற சாதனையைப் படைத்தார் மகேந்திரன்.

அதன் பின்னர் ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி மகேந்திரன் நடித்த விழா ஆனந்தம், விந்தை, நாடோடி கனவு, விரைவில் ஆசை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பை தரவில்லை. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மகேந்திரன் நடித்து கவனம் பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். அது ஒரு பயங்கரமான ஷோ. அந்த நிகழ்ச்சிக்கு போனால் கண்டிப்பாக விளையாடுவேன். ஆனால் அது என்னுடைய இடம் கிடையாது. அந்த இடம் எதுவுமே இல்லாதவர்களுக்கு தான் அந்த நிகழ்ச்சி தேவைப்படுகிறது. தன்னை யார் என்று தெரியாதவர்களுக்கு தான் அந்த நிகழ்ச்சி தேவைப்படுகிறது.

தான் எப்படிப்பட்டவன் என்று தெரியாதவர்களுக்கு அவர்களிடம் இருக்கும் திறமையை காட்டுவதற்கு தான் அந்த நிகழ்ச்சி தேவைப்படுகிறது. என்னை 106 நாள் கிடையாது 365 நாள் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் பிறந்த குழந்தையிலிருந்து என்னுடைய எல்லா ஸ்டேஜியும் மக்கள் பார்த்து விட்டார்கள். நான் தான் பெரிய பிக் பாஸ் பிளேயர். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் அது கரெக்டாக இருக்காது’ என்று பேசியுள்ளார்.
