கன்னடத் திரையுலகைச் சேர்ந்த நடிகர் தனுஷ் ராஜ் , தனது மனைவி அர்ஷிதா மீது பெங்களூரு கிரிநகர் காவல் நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை இன்று அளித்துள்ளார். அதில், தனது மனைவி தன்னைத் தாக்கித் துன்புறுத்துவதாகவும், தற்கொலை மிரட்டல் விடுத்துப் பழிவாங்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி தன்னிடம் பொய் கூறிவிட்டு வெளிநாட்டிற்குச் சென்றது குறித்துக் கேள்வி எழுப்பியதால் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக அர்ஷிதாவும் தனுஷ் ராஜ் மீது அதே காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனைத் தட்டிக்கேட்டபோது அவர் தன்னைத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணையாக 8 லட்சம் ரூபாய் கேட்டுத் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த பரஸ்பர புகார்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் கன்னடத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
