தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய சொந்த ஊர் இலங்கையில் உள்ள மன்னார் பகுதி. நடிகர் போண்டாமணியின் உண்மையான பெயர் கோத்தீஸ்வரன். அங்கு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை கனவாக இருந்தது.

1991 இல் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த ‘பவுனு பவுனுதான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்தவர் போண்டாமணி. இதைத் தொடர்ந்து சுந்தரா ட்ராவல்ஸ், மருதமலை, வின்னர் ,வேலாயுதம், ஜில்லா போன்ற பல திரைப்படங்கள் முன்னணி நடிகர்களுடன் சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பிரபலமானது.

இவர் 2019ல் வெளியான ‘தனிமை’ படத்திலும் நடித்திருந்தார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் இவருடைய நடிப்பு ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. இதுவரை 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கன்னட பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் மாதவி. இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பூண்டாமணி நேற்றிரவு தனது வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் பல்லாவரத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நடிகர் போண்டாமணியின் மரணம் திரை உலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
