நடிகர்களின் மகன்கள் சினிமாவிற்கு வருவது புதிதான விஷயம் அல்ல. ஆனால் அப்படி வந்தவர்கள் அனைவரும் சினிமாவில் வெற்றி பெற்றது இல்லை. அப்படியான வாரிசு நடிகர்களில் வரிசையில் ஒருவர் நடிகர் அதர்வா. 90களில் கொடிகட்டி பறந்த நடிகர் முரளி. அவரது மகனான அதர்வா, 2010-ம் ஆண்டு பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி உட்பட பல படங்களிலும் நடித்தார்.
தனது இரண்டாவது படத்திலேயே 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடும் படமாக முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் மாறியது. அதன் பின்னர் அதர்வாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘பரதேசி’. இயக்குநர் பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, அதர்வாவிற்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. இன்றளவும் அதர்வா பெயரைக் கேட்டாலே அவரது ‘பரதேசி’ பட கெட்டப் தான் பலரது கண்முன்பும் தோன்றும். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார். பரதேசி படத்தில் காட்சிக்கு காட்சிக்கு நடிப்பது போல் இல்லாமல் நிஜமாகவே வாழ்த்திருப்பார் என்றும் சொல்லும் அளவுக்கு அதர்வா நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.
அதை தொடர்ந்து ‘இரும்புக் குதிரை’ (2014), ‘சண்டி வீரன் (2015)’, ‘ஈட்டி’ (2015), ‘கணிதன்’ (2016), ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ (2017), ‘செம போத ஆகாதே’ (2018), ‘பூமராங்’ (2019) போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதில் ‘சண்டி வீரன்’ திரைப்படம் தவிர பிற திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக எவ்வித வெற்றியையும் எட்டவில்லை. ‘செம போதை ஆகாதே’ என்ற படம் மூலமாக அதர்வா தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா உடன் இணைத்து ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் நடித்தார்.
அடுத்தடுத்து தோல்விகளை தழுவி வந்த அதர்வா, ஓடிடி தளத்தில் மந்தகம் என்ற வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தது ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகர் அதர்வா, இயக்குநர் ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதர்வா நடித்து எந்தப் படம் வெளியாகி இருக்கிறது? அவருக்காக யார் இயக்குநர்களிடம் படம் கேட்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார் செய்யாறு பாலு.
அத்தோடு, கொரோனாவுக்கு முன்பு நடிகர் அதர்வா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், ஊரடங்குக்கு பிறகு மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போது, அதர்வா உடல் பருமன் அதிகரித்து விட்டதாகவும், சற்று உடல் எடையை குறைக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதர்வா ஆத்திரமடைந்ததாகவும், அவரது மேலாளரை விட்டு, இயக்குநரிடம் மன்னிப்பு கேட்க கோரியதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்..