மேற்கு வங்க மாநிலத்தில் கரக்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த 2021-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ, மாநில ஆயுதப் படைக்கு திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சீருடையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தனது அனுபவங்களைப் பகிர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார். அப்போது அவர் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’, ‘இன்ஷா அல்லாஹ்’ மற்றும் ‘ஜஸாகல்லாஹ்’ போன்ற இஸ்லாமிய வாழ்த்து வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஹிந்து லீகல் ஃபண்ட்’ என்ற அமைப்பு, அரசு சீருடையில் இருக்கும் அதிகாரி நடுநிலைமையைப் பேண வேண்டும் என்றும், ‘ஜெய் ஹிந்த்’ அல்லது ‘வந்தே மாதரம்’ போன்ற தேசிய வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றும் புகார் செய்தது.
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், ஓய்வுபெற்ற அதிகாரிகள் பலர் “இந்தியாவின் பலமே பன்முகத்தன்மைதான்” என புஷ்ரா பானோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு நிர்வாக ரீதியிலான இடமாற்றம் என்று தெரிவித்துள்ள போதிலும், இந்தச் சர்ச்சை எழுந்த சூழலிலேயே அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
