டோன்ட் வொரி… அங்கே அவர் இருப்பார்… சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் விஜயபாஸ்கரின் டாக்டர் பாசம்…!

By SATHISH R on ஆடி 6, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சாலையில் விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து நேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று பலரை அவர் ஆபத்தான சூழலில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். தற்போதைய சம்பவத்தின் வீடியோவை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வரும் நிலையில், இது அரசியல் வட்டாரத்திலும் இணையத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பிற அரசியல்வாதிகளைப் போல அன்றி, விஜயபாஸ்கர் செல்லும் இடங்களிலெல்லாம் விபத்துச் செய்திகள் வருவது ஏன் என்று சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அவரது ஆதரவாளர்கள், அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர் என்பதால், தன் கண்முன்னே நடக்கும் விபத்துகளைக் கண்டு கடந்து போகாமல், மனிதாபிமானத்தோடு முதலுதவி செய்து உயிர்களைக் காப்பாற்றுகிறார் என்று விளக்கம் அளித்துள்ளனர். கடந்த காலங்களிலும் கட்சிப் பாகுபாடின்றி திமுக பிரமுகரின் தந்தை, தனியார் தொழிற்சாலைப் பணியாளர்கள் எனப் பலருக்கு அவர் இவ்வாறு உதவியுள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர்.

   

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் விளங்கிய சி.விஜயபாஸ்கர், 2011 முதல் 2021 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 2011 முதல் தொடர்ந்து நான்கு முறை வென்றுள்ள இவர், தொகுதி மக்களுடன் எந்நேரமும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராகக் கருதப்படுகிறார்.

   

சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்த அதிரடி அரசியல் மாற்றத்திற்குப் பிறகும், அவர் தனது வழக்கமான மக்கள் சேவையையும், விபத்து கால மீட்புப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். வரவிருக்கும் விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் அவர் மீண்டும் தவெக சார்பில் போட்டியிடலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.