கில்லர் பட ஷூட்டிங்கில் விபத்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார் எஸ்.ஜே சூர்யா..!!

By Swetha on ஆனி 6, 2026

Spread the love

சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் ‘கில்லர்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, சிறப்புச் சண்டைக் காட்சிக்குத் தேவையான சிலிண்டர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் பணியில் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அதிகாலை நேரத்தில் ஒரு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் மதுரவாயலைச் சேர்ந்த மதன் (25) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சூர்யா, சக்திவேல், தினகரன் உள்ளிட்ட 4 தொழில்நுட்பக் கலைஞர்கள் கடுமையான தீக்காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த எதிர்பாராத துயர சம்பவம் ஒட்டுமொத்த ‘கில்லர்’ படக்குழுவையும், தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. விபத்து நடந்தவுடன் படப்பிடிப்பு உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிலிண்டர் விநியோகம் செய்த நபர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

   

இவ்விபத்தில் உயிரிழந்த மதனின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையிலும், சக தொழிலாளி என்ற முறையிலும் உயிரிழந்த மதனின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.