பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் (IBM), தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்குத் தகுதியான புதிய பட்டதாரிகளைத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. இது ஒரு ‘என்ட்ரி லெவல்’ (Entry Level) பணி என்பதால், இதற்கு முன் அனுபவம் ஏதும் தேவையில்லை. 2024 அல்லது 2025 ஆம் ஆண்டுகளில் பி.இ அல்லது பி.டெக் (BE/B.Tech) கணினி அறிவியல் மற்றும் அதன் தொடர்புடைய துணை படிப்புகளை முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது 6 CGPA பெற்றிருக்க வேண்டும் மற்றும் எந்தவிதமான ‘அரியர்ஸ்’ (Arrears) வைத்திருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஜாவா (Java), சி++ (C++), பைதான் (Python) மற்றும் நோட் ஜேஎஸ் (Node.Js) போன்ற புரோகிராமிங் மொழிகளில் அடிப்படை அறிவு கொண்டிருக்க வேண்டும். மேலும், மென்பொருள் உருவாக்க சுழற்சி (SDLC) முறைகள், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் மற்றும் பகுப்பாய்வுத் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெப் டெவலப்மென்ட் தொடர்பான ரூபி (Ruby) அல்லது க்ரூவி (Groovy) போன்ற ஸ்கிரிப்டிங் மொழிகள் தெரிந்திருப்பது கூடுதல் பலமாகும். இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றத் தயாராக இருக்கும் ஆர்வமுள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை உட்பட பெங்களூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, டெல்லி என நாடு முழுவதும் மொத்தம் 18 முக்கிய நகரங்களில் இப்பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ சம்பள விவரங்கள் நேர்காணலின் இறுதிச் சுற்றில் தெரிவிக்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசித் தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என்பதால், தகுதியுள்ள நபர்கள் ஐபிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
