சினிமாவில் நடிப்பதற்கு பொதுவாக அழகாக இருக்க வேண்டும், வசீகரிக்கும் முகம் வேண்டும், நல்ல உயரம் போன்றவைகள் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் எந்த ஒரு வசீகரிக்கும் உடல் இல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனி இடத்தை பிடித்தவர் தான் ஓமக்குச்சி நரசிம்மன். சினிமாவில் அவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
1936 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர் நரசிம்மன். ஒல்லியாக குச்சி போல் இருப்பதால் இவரை ஓமகுச்சி நரசிம்மன் என்று அழைக்க ஆரம்பித்தனர். இவர் மேடை நடிகர் மற்றும் பிரபலமான திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 14 இந்திய மொழிகளில் 1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். இதுமட்டுமில்லாமல் ஒரு ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இது பலருக்கும் தெரியாது.
இவர் நடித்த பல படங்களில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் பதியும் அளவுக்கு இவரது உடல் மொழி இருக்கும். சூரியன் படத்தில் கவுண்டமணிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் கதாபாத்திரமாக இவர் நடித்திருப்பார். அப்போது கவுண்டமணி இந்த கொசு தொல்லை தாங்க முடியல என்று கூறுவார். இப்போது வரை இந்த டயலாக் மக்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கிறது. எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் வந்தது. சினிமாவில் நடிக்கும் ஆசையை தனக்குள் தீவிரப்படுத்திக் கொண்டு 1953 ஆம் ஆண்டு ஔவையார் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
40 வருடங்களுக்கும் மேலாக கவுண்டமணி செந்தில் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் ஓமக்குச்சி நரசிம்மன். இணையும் வளர்ந்த பிறகு தான் இவர் இவ்வளவு படங்களில் நடித்திருக்கிறாரா என்பதே மக்களுக்கு தெரியவந்தது. சினிமாவில் அழகுக்கு மவுசு இருந்தாலும் ரசிகர்கள் திறமைக்கும் மரியாதை கொடுப்பார்கள் என்பதற்கு உதாரணமாக தான் ஓமக்குச்சி நரசிம்மன் இருந்திருக்கிறார். இவரின் திறமை, நகைச்சுவை, உடல்மொழியைப் பார்த்து பல ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள்.