பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி தமிழ்நாட்டில் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது தன் சொந்த அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளார். இன்று தங்களின் புதிய இயக்கம் குறித்து நேரலையில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரு தூய்மையான மற்றும் திறமையான அரசியலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், வரவிருக்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தங்களது புதிய கட்சி உறுதியாகப் போட்டியிடும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்திப் பேசிய அண்ணாமலை, ஒரு முதலமைச்சரோ, அமைச்சரவையோ அல்லது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோ மட்டுமே நினைத்தால் மாநிலத்தை மாற்றிவிட முடியாது என்று குறிப்பிட்டார். அவர்களோடு இணைந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தூய்மையான பங்களிப்பும், உழைப்பும் இருந்தால் மட்டுமே உண்மையான மாற்றத்தைச் சாத்தியப்படுத்த முடியும் என்றார். அரசியலில் திறமை படைத்தவர்களுக்கும், சாமானியர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த புதிய அரசியல் பாதையில் மிக முக்கிய அங்கமாக, கோவையில் ‘அப்துல்கலாம் சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ்’ (APJ Abdulkalam Centre for Ethics & Politics) என்ற பெயரில் ஒரு அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். தங்களது இயக்கத்தின் சார்பில் எம்.எல்.ஏ தேர்தலிலோ அல்லது உள்ளாட்சித் தேர்தலிலோ போட்டியிட விரும்பும் எவராக இருந்தாலும், இந்த மையத்தில் முறையான பயிற்சி பெற்ற பிறகே களமிறக்கப்படுவார்கள். சமூகத்தின் உண்மையான தேவைகள் என்ன, அவற்றுக்கான தீர்வுகள் என்ன என்பதை மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக உணர்ந்து கொள்வதற்காகவே இந்த மையம் தொடங்கப்படுகிறது.
அரசியல் பதவிகளில் தனிநபர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும் வகையில், “எத்தனை முறை எம்.எல்.ஏ அல்லது எம்.பி-யாக இருக்க வேண்டும் என்ற வரம்பு முறை எனக்கு உட்பட அனைவருக்கும் கொண்டு வரப்படும்; நிரந்தர பதவியில் யாரும் இருக்க முடியாது” என்றும் அண்ணாமலை அதிரடியாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு, திறமையான மனிதர்களை ஒன்றிணைத்து, கொள்கை சார்ந்த உத்வேகமான தொண்டர்களை உருவாக்குவதே தங்களின் முதல் பணி என்று கூறியுள்ள அவர், இந்த தூய்மையான அரசியல் இயக்கத்தில் இணையுமாறு தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
