தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள், அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் சமீபத்திய பேச்சுகள், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய இரு தொகுதிகளில் இவர்கள் போட்டியிடும் நிலையில், வெற்றி வாய்ப்பு குறித்து அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் மற்றும் பிரச்சாரத்தின் போது செய்யும் தவறுகள் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகின்றன.
புதுச்சேரியின் மணவெளி தொகுதியில் தவெக வேட்பாளர் ராமுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த விஜய், அருகில் இருந்த வேட்பாளரின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. “நமது வேட்பாளர் செல்வத்திற்கு வாக்களியுங்கள்” என்று அவர் கூற, அதிர்ச்சியடைந்த ராமு உடனடியாகத் தனது பெயரை நினைவூட்டினார். விஜய் குறிப்பிட்ட செல்வம் என்பவர் அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தவெகவுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றுவிட்டு, எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசிய விஜய்யின் இந்தச் ‘சொதப்பல்’ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைவர் ஒருபுறம் தடுமாறினால், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒரு விசித்திரமான கருத்தைத் தெரிவித்துள்ளார். வட சென்னை திமுகவுக்கு எதிராக மாறிவிட்டதாகக் கூறிய அவர், அதே வேகத்தில் “சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். தவெக போட்டியிடும் தொகுதிகளிலும் திமுகவே வெல்லும் என்பது போன்ற அவரது பேச்சு, கட்சியின் வெற்றிக்காக உழைக்கும் தொண்டர்களை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உரைய வைத்தது.
தொடர்ச்சியாக வேட்பாளர்களின் பெயர்களை மாற்றிச் சொல்வது, கூட்டணி மற்றும் கொள்கை தெளிவின்றி எதிரணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தவறுதலாகப் பேசுவது என தவெக தலைமை தடுமாறி வருவது அக்கட்சியின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். “தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழி” என்ற பழமொழிக்கு ஏற்ப, தலைமையின் இந்த அடுத்தடுத்த சறுக்கல்கள் தேர்தல் களத்தில் தவெகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
