தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இடம்பெறுவது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவுக்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இன்று (மே 22) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எந்தவொரு அரசியல் கட்சியும் திமுகவிற்குத் தனது அடிமை சாசனத்தை எழுதிக் கொடுக்கவில்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தங்களின் கூட்டணி மற்றும் அமைச்சரவை பங்கீடு குறித்துச் சுயமாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு உண்டு என்றும் மிகத் திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களைக் குறிவைத்து தரம் தாழ்ந்த வகையில் ஆ.ராசா விமர்சனம் செய்திருப்பது, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் கற்றுக்கொடுத்த அரசியல் நாகரிகத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் சாடினார். திமுகவின் பாரம்பரிய கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் தற்போதைய திமுகவினர் முழுமையாக மறந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டிய அவர், இந்தச் சர்ச்சை பதிவிற்காக ஆ.ராசா தமிழக மக்களிடமும் திருமாவளவனிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
