கர்நாடக மாநிலம் தண்டேலியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நிகழ்ந்த ஜிப்லைன் விபத்து ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் பதறவைத்துள்ளது. விஜயபுராவைச் சேர்ந்த 24 வயதான குபேர் சுர்பூர் என்ற இளைஞர் இந்த சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 40 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராதவிதமாக பாதுகாப்புப் பூட்டு அறுந்து கீழே விழுந்துள்ளார். இந்த கோர விபத்தில் அவரது கை, கால்களில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டு, தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார். இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது.
இந்த விபத்திற்கு ரிசார்ட் நிர்வாகத்தின் போதிய பாதுகாப்பு குறைபாடே காரணம் என இளைஞரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மருத்துவச் செலவுகளை ஏற்பதாகக் கூறிய ரிசார்ட் நிர்வாகம் பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் அவர்கள் புகாரளித்துள்ளனர். ஆனால், ரிசார்ட் தரப்போ இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்றும், அப்போது அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டன என்றும் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க சாகச விளையாட்டு உபகரணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
